தெலங்கானா போக்குவரத்து ஊழியர்,சுரேந்திர கவுட் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
Hyderabad:
தெலங்கானா மாநில போக்குவரத்துக் கழகமான (Telangana State Road Transport Corporation) TSRTC-யைச் சேர்ந்த 2 ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹிட்லராக மாறிவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ தாகூர் ராஜா சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த ஒரு பேருந்து ஓட்டுநர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்றைய தினம் ஐதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு போக்குவரத்து ஊழியர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகமான TSRTC ஊழியர்கள், கடந்த அக்டோபர் 5ம் தேதி வேலை நிறுத்தத்தை ஆரம்பித்ததில் இருந்து ஏற்பட்ட இரண்டாவது தற்கொலை சம்பவம் இது.
தெலங்கானாவின் (Telangana) போக்குவரத்துக் கழகமான (Telangana State Road Transport Corporation) TSRTC-யைச் சேர்ந்த சுமார் 48,000 ஊழியர்கள், பல்வேறு குறைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த 5ம் தேதி ஆரம்பித்தனர். இதனால் கோபமடைந்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் (K Chandrasekhar Rao), அனைவரையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ், “பண்டிகை நாட்களில் இதைப் போன்று ஒரு காரியத்தில் ஈடுபட்டதும், போக்குவரத்துக் கழகம், 1,200 கோடி ரூபாய் நஷ்டத்திலும் இருக்கும்போது இப்படி ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். போக்குவரத்துக் கழகத்தின் கடன் சுமை மட்டும் சுமார் 5,000 கோடி ரூபாயாகும். பணி நீக்கம் செய்த ஊழியர்களோடு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இனி இடமில்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ தாகூர் ராஜா சிங் கூறும்போது, முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹிட்லராக மாறிவிட்டார். ஹிட்லர் என்ன செய்தார் என்பது நமக்கு நன்கு தெரியும். இரண்டு அரசு ஊழியர்களின் உயிரிழப்பிற்கு அரசே முழு பொறுப்பு.
அரசு அதன் முடிவை மாற்றிக்கொண்டு, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட சுரேந்திர கவுட்டின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சுரேந்திர கவுட் தெலங்கானா போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தவர். இவர், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால், பணிநீக்கம் செய்யப்பட்ட சுரேந்திர கவுட், மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.