பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும்.
சல்மான்கான் நடத்தும் ரியாலிட்டி ஷோ “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குஜ்ஜார் கோரிக்கை விடுத்துள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தடை விதிக்க கோரி கடிதமும் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் இவர் சல்மான் கான் நடத்திவரும் பிக்பாஸ் ரியாலிடி ஷோவினால் மிகப்பெரிய கலாச்சார கேடு விளைவிப்பதாக கூறிவருகிறார்.
பாஜக எம்எல்ஏ அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
"இந்த நிகழ்ச்சி ஆபாசமான மற்றும் மோசமான செயல்களை ஊக்குவிப்பதாக உள்ளது. குடும்பத்தினர் வீட்டில் அமர்ந்து பார்க்க தகுதியற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.
இந்த நிகழ்ச்சி நாட்டின் கலாச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது மற்றும் மிகவும் ஆட்சேபனைக்குரிய நெருக்கமான படுக்கைக் காட்சிகள் கொண்டுள்ளது. இதில் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஒரே படுக்கையில் இருப்பதுபோன்று காட்டப்படுகிறார்கள்; குடும்பத்தினரோடு அமர்ந்து பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது.
குழந்தைகளும் சிறார்களும் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள், ஆனால் இந்நிகழ்ச்சி வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் இணையத்திலும் கிடைக்கின்றன.
ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது இழந்த பெருமையை மீண்டும் பெற முயற்சிக்கிறார், மறுபுறம், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தை இழிவுபடுத்துகின்றன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கத்திற்கான தணிக்கைமுறைகள் வரையறுக்கப்பட வேண்டும். நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையில், உத்தரபிரதேச நவ நிர்மாண் சேனா தலைவர் அமித் ஜானி, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நிறுத்தப்படும் வரை எந்த தானிய உணவையும் சாப்பிட மாட்டேன். பழங்கள், காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வேன் என்று அறிவித்துள்ளார்.