பாஜக எம்.பி. சரத் திரிபாதி பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் பாகலை ஷூவால் தாக்கும் காட்சி.
ஹைலைட்ஸ்
- எம்.பி. எம்.எல்.ஏ. ஆகியோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்
- பெயர்ப்பலகையில் தனது பெயர் இல்லாததால் சண்டை வெடித்தது
- ஷூ தாக்குதல் சம்பவத்தால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு
Lucknow: உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி. சரத் திரிபாதியும், எம்.எல்.ஏ. ராகேஷ் பாகலும் ஒருவரை ஒருவர் ஷூவால் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி நாடு முழுக்க வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் சாந்த் கபிர் நகர் உள்ளது. இங்கு உள்ளூரில் அமைக்கப்பட்ட சாலைத்திட்டம் ஒன்றுக்கு பெயர்ப்பலகை கல்லில் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் பாஜக எம்.பி. சரத் திரிபாதியின் பெயர் இடம்பெறவில்லை.
இதற்கு பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் பாகல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பாக கூட்டம் நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். அப்போது, தனது பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று எம்.பி. சரத் திரிபாதி கேட்டுள்ளார்.
இதற்கு நான்தான் பெயரை பதிவு செய்யக் கூடாது என்று கூறினேன் என எம்.எல்.ஏ. ராகஷ் பாகல் பதில் அளித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக வெடித்தது.
சரத் திரிபாதி மற்றும் ராகேஷ் பாகல் (படத்தில் இருப்பவர்கள்)
அப்போது இருவரும் தங்களது ஷூவை கழற்றி மாறி மாறி அடித்துக் கொண்டனர். இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது இணைய தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சண்டை நடந்து கொண்டிருந்தபோது அதனை தடுக்க போலீசார் முயன்றுள்ளனர். வீடியோவின் இறுதிக் காட்சியில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
பாஜக எம்.பி. சரத் திரிபாதி சாந்த் கபிர் நகர் மக்களவை தொகுதியை சேர்ந்தவர். எம்.எல்.ஏ. ராகேஷ் சிங் பாகல் மேந்தாவல் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த ஷூ தாக்குதல் சம்பவம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.