அயோத்தி வழக்கில் வெளி வரும் தீர்ப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
Lucknow: டிசம்பர் 6-ம்தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அயோத்தி விவகாரத்தில் அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்திற்கு கடந்த 28 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி வலது சாரி அமைப்பினர் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர்.
தற்போது இந்த நிலத்திற்கு உரிமை கோரி சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா, நிர்மோகி அகோரா ஆகிய 3 அமைப்புகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. இதில் மூவரும் நிலத்தை பிரித்துக்கொள்ளுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் பாஜக எம்.பியான சாக்ஷி மகராஜ் எதிர்வரும் டிசம்பர் 6-ம்தேதி முதல் ராமர் கோயிலை கட்டும் பணிகள் தொடங்கும் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முயற்சியால் இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.