18 வருடங்களாக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். (File)
ஹைலைட்ஸ்
- மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் பட்டியலில் சிந்தியா பெயர்
- கட்சியில் இணைந்த ஒரு சில மணி நேரத்தில் எம்.பி பதவி
- 18 வருடங்களாக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து சிந்தியா ராஜினாமா
New Delhi: மத்தியப் பிரதேச மாநிலங்களைவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர் விவரங்களை பாஜக இன்று வெளியிட்டது. அதில், ஜோதிராதித்ய சிந்தியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்த ஒரு சில மணி நேரங்களில் அவரது பெயர் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
18 வருடங்களாகக் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. திடீரென காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்தது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்கக் காங்கிரஸ் திணறி வருகிறது.
காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரான சிந்தியா, கட்சியில் மூத்த தலைவர்களுடன் நீண்ட காலமாக அதிருப்தியிலிருந்ததாக தெரிகிறது. மேலும், கட்சி விவகாரங்களில் அவர் ஓரங்கட்டப்பட்டதன் விரக்தியின் வெளிப்பாடாகவே அவரது ராஜினாமாவைப் பலர் பார்க்கின்றனர்.
முன்னதாக, நேற்றைய தினம் நாடு முழுவதும் பரவலாக ஹோலி கொண்டாட்டங்கள் நடந்து வந்த நிலையில், ஜோதிராதித்ய தனது வண்டியை அமித் ஷா வீட்டு பக்கம் திருப்பினார். பின்னர் அங்கிருந்து இருவரும் பிரதமர் மோடி இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நடந்து முடிந்த ஒரு சில மணி நேரங்களிலே சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டார். தொடர்ந்து, தனது பதிவில் சோனியா காந்திக்கு அவர் அளித்த ராஜினாமா கடிதத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
முதலில் சிந்தியா பிற்பகல் 12.30 மணி அளவில் பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் ராகு காலம் காரணமாக 2 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து, கட்சியில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்படுகிறது. இதேபோல், கேபினட்டிலும் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் பாஜகவால் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.