மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரியில் போட்டியிடுகிறார்.
ஹைலைட்ஸ்
- பாஜக உத்தேச பட்டியல் நேற்று வெளியானது
- அதிகாரப்பூர்வ பட்டியலை பாஜக தலைமையகம் இன்று வெளியிட்டது
- 184 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், சிவகங்கை தொகுதியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளான பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒரு தொகுதியும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய தமிழகத்திற்கு ஒரு தொகுதியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் அளிக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மக்களவை தேர்தலில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்று பாஜகவின் உத்தேச பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ பட்டியலை டெல்லி பாஜக தலைமையகம் வெளியிட்டது.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் அடங்கிய உயர் மட்ட குழு கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முதல்கட்டமாக 184 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனும், சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.