எம்.பி., சாக்ஷி மகராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல
ஹைலைட்ஸ்
- டெல்லியில் உள்ள ஜம்மா மசூதியை ஷாஜகான் கட்டினார்.
- பொதுக் கூட்டத்தில் இந்தக் கருத்தை கூறியுள்ளார் மகராஜ்
- அவரின் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Unnao: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், ‘டெல்லியின் ஜம்மா மசூதிக்கு அடியில் பல இந்து சிலைகள் இருக்கின்றன. அப்படியில்லை என்றால், என்னைத் தூக்கிலிடுங்கள்' என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மகராஜ், ‘நான் அரசியலுக்கு வந்த பின்னர் பேசிய முதல் உரையில், அயோத்யா, காசி, மதுராவில் இருக்கும் மசூதிகளை விடுங்கள். டெல்லியில் இருக்கும் ஜம்மா மசூதியை இடித்து, அதன் படிக்கட்டுகள் அடியில் பாருங்கள். அங்கு இந்து சிலைகள் கிடைக்கும். அப்படியில்லை என்றால், என்னைத் தூக்கிலிடுங்கள் என்று பேசினேன்' என்று உரையாற்றியுள்ளார்.
அவர் தொடர்ந்து, ‘இந்தியாவில் ஆட்சி செய்த முகலாய மன்னர்கள், நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்து ஆலயங்களை இடித்து, 3000-க்கும் மேற்பட்ட மசூதிகளை கட்டினார்கள். இந்து கலாசாரத்தை அழிக்கத்தான் அவர்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டனர்' என்று பேசினார்.
டெல்லியில் உள்ள ஜம்மா மசூதி, 1644 முதல் 1656 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், ஷாஜகானால் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மசூதிகளில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்யாவில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிற குரல் தொடர்ந்து பலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், சாக்ஷி மகராஜின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிவசேனாவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான சஞ்சய் ராவத் சில நாட்களுக்கு முன்னர், ‘வலதுசாரி தொண்டர்களால் 17 நிமிடத்தில் தரைமட்டமாக ஆக்கப்பட்டது அயோத்யா பாபர் மசூதி. அப்படியிருக்க ராமர் கோயில் ஒன்றை ஆயோத்யாவில் கட்ட பாஜக இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன். ராமர் கோயில் விவகாரத்தை பாஜக, அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் பயன்படுத்தி வருகிறது' என்று குற்றம் சாட்டினார்.
எம்.பி., சாக்ஷி மகராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. 2015, ஜனவரியில், ‘இந்துப் பெண்கள் அவர்களின் மதத்தைப் பாதுகாக்க குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.
தாத்ரியில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி முஸ்லிம் ஒருவரை வலதுசாரி அமைப்பினர் அடித்துக் கொன்றபோது, அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் மகராஜ். அவர், ‘எங்கள் தாய் போல இருக்கும் பசுவை யார் கொலை செய்தாலும், அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அப்படி செய்பவர்களை நாங்கள் கொலை செய்யத் தயாராக இருக்கிறோம்' என்று அப்போது கருத்து தெரிவித்தார்.