This Article is From Aug 28, 2019

Piyush manush: சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது பாஜகவினர் தாக்குதல்!

பியூஷ் மனுஷ் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Piyush manush: சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது பாஜகவினர் தாக்குதல்!

மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க பாஜக அலுவகலம் சென்ற சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், பாஜகவினரால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் வசிக்கும் சமூக செயற்பட்டாளரான பியூஷ் மனுஷ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் பல்வேறு சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து கையாண்டு வருகிறார். குறிப்பாக ஏரிகள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வரும் அவர், மத்திய அரசின் நியூட்ரினோ, 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார். 

இந்நிலையில், சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற அவர், அங்கு இருந்த நிர்கிகளிடம் பொருளாதார வீழ்ச்சி அடைவதற்கு என்ன காரணம்?, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது எதற்காக? என மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி வாதம் செய்துள்ளார். 

இதனை அவர் தனது முகநூலில் லைவ் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.. அப்போது இருதரப்பினரிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாஜகவினர் பியூஸ் மானுஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பியூஷ் மனுஷை மீட்டு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பாக விளக்கமளித்த பாஜகவினர், பியூஷ் மனுஷ் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் பாஜகவினர் கூறியுள்ளனர். 

இதுகுறித்து பியூஷ் மனுஷ், காஷ்மீர் விவகாரம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் கேள்வி எழுப்ப பாஜக அலுவலகம் சென்ற போது தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். தன் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் செல்போன்களையும் பறித்துக்கொண்டதாக தெரிவித்த அவர், பாஜகவினர் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

.