மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் பொதுக்கூட்டம் நடத்தினா அமித் ஷா.
ஹைலைட்ஸ்
- 25 பேர் சேர்ந்து விட்டால் மோடியை அசைத்து பார்த்து விட முடியுமா?-அமித் ஷா
- மோடியுடன் மக்கள் இருப்பதாக பேசியுள்ளார் அமித் ஷா
- வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக மேற்வங்கம் மாறிவிட்டதாக விமர்சனம்
Kolkata: நாட்டில் பாஜகவுக்கு எதிராக உள்ள 23 கட்சிகளில் 9 தலைவர்களுக்கு பிரதமராகும் ஆசை உள்ளது என்று பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார். கடந்த வாரம் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி பொதுக் கூட்டம் நடத்தினார். இதனை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார் அமித் ஷா.
மம்தாவின் கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கு வங்காள பாஜக அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. மால்டாவில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது-
ரவிந்திரநாத் தாகூர் பிறந்த மண் மேற்கு வங்காளம். ஆனால் இந்த மாநிலம் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. வங்கத்தின் புகழை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும் என்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும்.
ஒரு 25 எதிர்க்கட்சி தலைவர்கள் சேர்ந்து விட்டால் மோடியை அசைத்து விட முடியுமா? மோடியுடன் மக்கள் இருக்கிறார்கள். அவர் சிகரத்தை போன்ற உயரத்தில் இருக்கிறார்.
பாஜகவை 23 கட்சிகள் எதிர்க்கின்றன. அவற்றில் உள்ள 9 தலைவர்களுக்கு பிரதமர் ஆகும் ஆசை இருக்கிறது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரே ஒரு பிரதமர்தான். அவர் நரேந்திர மோடி.
இவ்வாறு அமித் ஷா பேசினார். அவர் விமர்சித்த சில மணி நேரங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பேஸ்புக்கில் பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
அமித் ஷா பேசியதை பார்க்கும்போது அவர் நடுங்கி விட்டார் என்பது தெளிவாகிறது. ஆட்சி பறிபோகும் நாளை அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக அவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். பாஜகவினரின் பேச்சு தரம் தாழ்ந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.