This Article is From Nov 20, 2018

'ஐயப்ப பக்தர்கள் கைதிகள் அல்ல!’- பினராயி விஜயனைச் சீண்டும் அமித்ஷா

சபரிமலை விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ட்விட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

'ஐயப்ப பக்தர்கள் கைதிகள் அல்ல!’- பினராயி விஜயனைச் சீண்டும் அமித்ஷா

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, மூன்றாவது முறையாக கோயில் நடை வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டது

New Delhi:

சபரிமலை விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ட்விட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சபரிமலை விவகாரத்தை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு நடத்தி வரும் விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், இருப்பிடம் மற்றும் கழிவறை கூட இல்லாத நிலை இருக்கிறது. இள வயதுப் பெண்கள், முதியவர்களை கேரள போலீஸ் மரியாதை குறைவாக நடத்துகிறது.

ஐயப்ப பக்தர்களை பினராயி விஜயன், கைதிகளைப் போல நடத்த முடியாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மக்களின் நம்பிக்கைகளில் அரசு விளையாடக் கூடாது. மக்கள் இயக்கத்தை அடக்கலாம் என்று பினராயி விஜயன் நினைத்தால் அது நடக்காது' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, மூன்றாவது முறையாக கோயில் நடை வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டது. இந்நிலையில் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றன இந்து அமைப்புகள்.

கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இதுவரை ஐயப்பன் கோயில் 3 முறை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.

மகரவிளக்கு' பூஜைகளுக்காக வெள்ளி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களுக்கு கோயில் திறந்த நிலையில் தான் இருக்கும்.

.