This Article is From Apr 08, 2019

‘மேலும் வரிச் சலுகை…’- பாஜக அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு வாக்குறுதி!

7 கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது

‘மேலும் வரிச் சலுகை…’- பாஜக அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு வாக்குறுதி!

மே 19 ஆம் தேதி வரை நடக்கும் இந்தத் தேர்தலின் முடிவுகள் மே 23-ல் அறிவிக்கப்படும். 

New Delhi:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அரியணையில் அமரவைக்கப்பட்டால், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று பாஜக-வின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. அதில், ‘சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பல வரிச் சலுகைகள் கொடுக்கப்பட்டன. அதை நாங்கள் மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம். இதன் மூலம் இந்தியாவின் நடுத்தர குடும்பங்களின் கைகளில் அதிக பணம் இருக்கும்' என்று கூறப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ‘சங்கல்ப் பத்ரா' என்று தேர்தல் அறிக்கைக்கு பெயர் சூட்டியுள்ளது பாஜக. 

அதில் நடுத்தர மக்களுக்கு கொடுக்கப்படும் வரிச் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நாட்டின் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நல்ல நகர்ப்புற வாழ்க்கைச் சூழல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு வரி விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. 

‘எங்கள் பொருளாதாரக் கொள்கை என்பது, வரி விகிதத்தைக் குறைக்கும் நோக்கம் கொண்டது. எங்கள் ஆட்சி காலத்தில் திறம்பட வரி விதிப்பு செய்யப்பட்டதால், வரிக்கான ஜிடிபி விகிதம் 12 சதவிகிதமாக அதிகரித்தது. இது 2013-14 ஆண்டில் வெறும் 10.1 சதவிகிதமாகவே இருந்தது. கூடுதலாக வந்த வரி வருவாயின் மூலம், ஏழைகளுக்கு பொதுநலப் பணிகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன. நாங்கள் தொடர்ந்து வரி விகிதத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துவோம். இதன் மூலம் உண்மையாக வரி செலுத்துவோர் பயன்பெறுவர்' என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

7 கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது. மே 19 ஆம் தேதி வரை நடக்கும் இந்தத் தேர்தலின் முடிவுகள் மே 23-ல் அறிவிக்கப்படும். 

.