This Article is From Mar 22, 2019

நட்சத்திர தொகுதியான தூத்துக்குடி; சிவகங்கையில் எச்.ராஜா; பாஜக வேட்பாளர் பட்டியல் பரபர!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளில், பாஜக-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 

நட்சத்திர தொகுதியான தூத்துக்குடி; சிவகங்கையில் எச்.ராஜா; பாஜக வேட்பாளர் பட்டியல் பரபர!

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Chennai:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை நேற்று அறிவித்தது. அதில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவர் என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளில், பாஜக-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 

இந்நிலையில் அந்தத் தொகுகளில் யாரெல்லாம் போட்டியிட உள்ளனர் என்பதை நேற்று பாஜக அறிவித்தது. அதன்படி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரியிலிருந்து மீண்டும் போட்டியிட உள்ளார். பாஜக மாநிலத் தலைவர், தமிழிசை சவுந்திரராஜன், தூத்துக்குடியில் களமிறங்க உள்ளார். பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, சிவகங்கையில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த முறை தூத்துக்குடியில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழிசை களம் காணுவதால், தூத்துக்குடி நட்சத்திர தொகுதி அந்தஸ்து பெற்றுள்ளது. 

2014 ஆம் ஆண்டு முதல் பாஜக-வின் மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் தமிழிசை, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் அதிகமாக நாடார் சமூக மக்கள் இருப்பதால், அவருக்கும் கணிசமாக வாக்குகள் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தூத்தக்குடியில் போட்டியிடுவது குறித்து தமிழிசை, பிடிஐ நிறுவனத்திடம் பேசுகையில், ‘தூத்துக்குடி தொகுதிக்கென்று பிரத்யேகமாக தொலைநோக்குத் திட்டத்தை நான் சீக்கிரமே வெளியிடுவேன். தூத்துக்குடி மக்களுக்கு சேவையாற்ற நான் ஆவலாக இருக்கிறேன். மார்ச் 26 ஆம் தேதி முதல் நான் தூத்துக்குடியில் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளேன்' என்று கூறியுள்ளார்.

முன்னதாக பாஜக சார்பில் 1999 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் போட்டியிட்டு பொன்னார், வெற்றி பெற்றார். 

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் கோயம்புத்தூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகள் நடந்த லோக்சபா தேர்தல்களில் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அதிமுக-வில் அமைச்சராக இருந்து நயினார் நாகேந்திரன், 2017 ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். அவருக்கும் ராமாநாதபுரத்திலிருந்து போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 

பாஜக தலைமை நேற்று அதிகாரபூர்வமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே எச்.ராஜா, வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார். இது குறித்து பேசிய தமிழிசை, ‘பாஜக-வின் மாநிலத் தலைவராக இது குறித்து கருத்து கூறுவதென்றால், அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்' என்று மட்டும் தெரிவித்தார். 
 

.