This Article is From Jun 29, 2018

தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கமா..?- பாஜக விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, அப்பதவியிலிருந்து நீக்கப் போவதாக ஒரு தகவல் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதற்கு பாஜக பதில் அளித்துள்ளது.

தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கமா..?- பாஜக விளக்கம்

ஹைலைட்ஸ்

  • தமிழக பாஜக-வின் தலைவராக தமிழிசை செயல்பட்டு வருகிறார்
  • அவருக்கு மநீம கட்சியுடன் கருத்து போர் நடந்தது
  • இதையடுத்து முரளிதர் ராவ், பாஜக தலைமைக்குக் கடிதம் எழுதியதாக தகவல்
Chennai:

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, அப்பதவியிலிருந்து நீக்கப் போவதாக ஒரு தகவல் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதற்கு பாஜக பதில் அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜக-வின் தமிழ்நாட்டுத் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் ஒரு திடுக்கிடும் தகவலை சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்களுக்குச் சொன்னார் தமிழிசை. ‘கமல்ஹாசன் தொடங்கிய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் என்னை இணைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்திருக்கிறது. எனக்கு உறுப்பினர் எண் கூட அனுப்பியிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்திடம் இருக்கும் அனைத்து மின்னஞ்சலுக்கும் இதைப் போன்ற உறுப்பினர் சேர்க்கையை அனுப்பிவிடுவார்கள் போல் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வெற்றிடத்தை கமல்ஹாசனால் நிரப்ப முடியாது’ என்று கூறினார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழிசையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து, உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு அழைப்பு வந்ததற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. மேலும், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உறுப்பினர் சேர்க்கையிலிருந்து வெளியேறுவதற்கும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்சி முன்னால் நீங்கள் அவமானப்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். தற்போதைக்கு, மக்கள் நீதி மய்யத்திற்கு உங்களை வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டது.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக பாஜக-வின் செயலாளர் முரளிதர் ராவ், தேசிய பாஜக தலைமைக்கு, ‘தமிழிசயைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள்’ என்று சிபாரிசு செய்ததாக ஒரு தகவல் கூறப்பட்டது. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ராவ், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

‘அமித் ஷாவுக்கு நான் அனுப்பிய அறிக்கையை அடுத்து, தமிழக பாஜக தலைமையில் மாற்றம் செய்யப்படும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது உண்மையல்ல’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் முரளிதர் ராவ். 

.