தியானத்திற்காக ராகுல் வெளிநாடு சென்றார் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
New Delhi: அடிக்கடி வெளிநாடு செல்லும் காரணத்தை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்த பயணங்களுக்கு பணம் எப்படி வருகிறது என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயண விவரங்களை வெளியிட வேண்டும். எதற்காக அவர் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? ஒவ்வொரு பயணத்திற்கும் தேவையான பணம் எங்கிருந்து வருகிறது என்பதையெல்லாம் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்க வேண்டும்.
ராகுல் ஒரு மக்கள் சேவகர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அப்படியிருக்கயில், அவர் தனது பயண விவரங்களை தெரிவிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராகுல் காந்தி 16 முறை வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இது அவரது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு சென்றதை விட அதிகம்.
இப்படி வெளிநாடு அடிக்கடி சென்று கொண்டிருப்பதன் காரணமாகத்தான் அமேதி தொகுதி மக்கள் ராகுல் காந்தியை தேர்வு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொருளாதார மந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வந்த நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்றார். அவர், எந்தவொரு போராட்டத்திலும் பங்கெடுக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் கட்சி, அவர் தியானம் செய்வதற்காக வெளிநாடு சென்றார் என்று தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக., 'தியானம் செய்வதற்கு மிகச்சிறந்த நாடாக இந்தியா உள்ளது. ஆனால் ராகுல் காந்தி வெளிநாடுகளைத்தான் விரும்புகிறார்' என்று கிண்டல் செய்துள்ளது.