This Article is From May 18, 2019

“காந்தி, பாகிஸ்தானின் தேசத் தந்தை” - பாஜக செய்தித் தொடர்பாளர் கருத்து!

போபாலில் இருந்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர், சில நாட்களுக்கு முன்னர், “நாதுராம் கோட்சே, தேச பக்தராக இருந்தார்" எனக் கருத்து கூறினார்

“காந்தி, பாகிஸ்தானின் தேசத் தந்தை” - பாஜக செய்தித் தொடர்பாளர் கருத்து!

பிரக்யா தாகூர் தொடர்பான சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

Bhopal:

பாஜக-வின் மத்திய பிரதேச மாநில, செய்தித் தொடர்பாளர் அனில் சவுமித்ரா, “மகாத்மா காந்தி, பாகிஸ்தானின் தேசத் தந்தை” என கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜக, அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

அனில் சவுமித்ரா முன்னதாக ஃபேஸ்புக்கில், “மகாத்மா காந்தி, தேசத் தந்தைதான். அவர், பாகிஸ்தானின் தேசத் தந்தை ஆவார். அவரைப் போன்று பல கோடி பேர் இந்தியாவில் இருக்கின்றனர்” என்று பதிவிட்டிருந்தார். 

இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பிய போது, “யாரும் இந்த நாட்டின் தேசத் தந்தையைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மகாத்மா காந்தி, பாகிஸ்தானின் தேசப் பிதாவாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்திய தாயின் பிள்ளைகளாக இருக்க நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்” என்றார்.

சவுமித்ராவின் கருத்து சர்ச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அவர் தனது பதிவினை நீக்கினார். 

அவர் மேலும், “ஒருவர் 24 மணி நேரமும் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க முடியாது. அவர் சொல்லும் கருத்து எப்போதும் அவர் சம்பந்தப்பட்ட கட்சியின் கருத்தாக இருக்காது” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

போபாலில் இருந்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர், சில நாட்களுக்கு முன்னர், “நாதுராம் கோட்சே, தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். தொடர்ந்து அவர் தேச பக்தராக இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள், தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். 

பிரக்யா தாகூரின் கருத்துக்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். பிரக்யா தாகூர், “நான் பாஜகவின் உண்மையான சேவகி. கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடைய நிலைப்பாடு.

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்தாகும். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அப்படி யாரையேனும் எனது கருத்து காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்காக காந்தி செய்த எதையும் மறக்க முடியாது. எனது கருத்துக்கள் ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளன” என மன்னிப்பு கோரினார். 

பிரக்யா தாகூர் தொடர்பான சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

.