This Article is From Oct 30, 2018

‘உங்கள் கோத்திரம் என்ன..?’- ராகுலிடம் அநாகரீக கேள்வி கேட்ட பாஜக

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது

ராகுலின் கோயில் தரிசனம் குறித்து பாஜக கடுகடுத்துள்ளது இது முதல் முறையல்ல

ஹைலைட்ஸ்

  • பாஜக செய்தித் தொடர்பாளர் பத்ரா, இப்படி கேள்வி கேட்டுள்ளார்
  • பத்ராவுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
  • ராகுல் தொடர்ந்து பல கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார்
Indore:

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘உங்கள் கோத்திரம் என்ன ராகுல் காந்தி?' என்று அநாகரீக முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் மகாகலேஷ்வர் கோயிலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சென்ற ராகுல், சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பாஜக செய்தி தொடர்பாளர் பத்ரா, ‘ராகுல் காந்தி பூணூல் போட்டிருக்கிறார். அவர் உஜ்ஜயின் கோயிலுக்கு செல்கிறார் . நாங்கள் அவரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்?' என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, ‘ராகுல் காந்தியிடம் உங்கள் அஜெண்டா என்ன, விவசாயம் குறித்து உங்கள் திட்டம் என்ன, பண வீக்கத்தைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டிருக்கலாம். ஆனால் அதுவெல்லாம் முக்கியமில்லை, ‘உங்கள் கோத்திரம் என்ன' என்று கேள்விதான் முக்கியம் என்றால், கடவுளே எங்களைக் காப்பாறுங்கள்' என்று வருத்தப்பட்டுள்ளார். 
 

jjaumnt8

ராகுலின் கோயில் தரிசனம் குறித்து பாஜக கடுகடுத்துள்ளது இது முதல் முறையல்ல. குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், ராகுல் அங்கிருக்கும் சோம்நாத் கோயிலுக்கு சென்றார். அப்போதும் பாஜக தரப்பு அவரை கடுமையாக விமர்சித்தது. அதற்கு ராகுல், ‘நான் ஒரு சிவ பக்தன். பாஜக என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் எனக்கு உண்மையாக இருப்பேன்' என்று கூறினார். 

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அங்கு களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

.