இடதுசாரி அரசு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை குறிவைத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது
New Delhi: அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு சபரிமலைக்கு பெண்களை வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேரள அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, ‘இடதுசாரி அரசானது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை குறிவைத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது என்றார்.
கேரள மாநிலம் கன்னூரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக தலைவர் அமித்ஷா பின்னர் பேசியதாவது, கேரளாவில் மாநில அரசின் கொடூரத்திற்கு எதிராகவும் மதநம்பிக்கைகளை காப்பற்றவும் மாபெரும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு பாஜக மலை போன்று பாதுகாப்பாக இருந்து வருகிறது. இடதுசாரி கடும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய அவர், "உங்கள் உணர்வுகளுக்கு ஆதரவாக பாஜக ஒரு மலையைப் போல் துணை நிற்கும் என்பதை கேரள மக்களிடம் நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். கேரள மக்களுக்கும், ஐய்யப்பன் பக்தர்களும் எப்போதும் நாங்கள் துணை நிற்போம்.
சபரிமலையில் உள்ள தெய்வம் பிரம்மச்சாரி ஆகும். அதனால் ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல், பெண்களுக்கென்றே தனி சிறப்புடன் பல கோவில்கள் உள்ளன, அங்கு ஆண்கள் அனுமிதக்கப்படுவதில்லை, அவர்கள் உள்ளே செல்ல முயற்சி செய்யவும் இல்லை என்று அவர் கூறினார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து இந்த மாதம் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சில பெண்கள் கோவில் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு பெண்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.