ராகுலின் கற்பனையை போல், காஷ்மீரில் எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
New Delhi: ஜம்மு-காஷ்மீர் குறித்த ராகுலின் கருத்து நாட்டை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் கட்சியும், ராகுலும் அவர்களது கருத்திற்காக மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்சனை என கூறும் ராகுல் காந்தி, அங்கு ஏற்படும் வன்முறைக்கு பாகிஸ்தானே காரணம் என்று கூறுகிறார். இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்? என ஜவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் மக்கள் உயிரிழந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன, அங்கு தவறான விஷயங்கள் நடந்து வருகிறது என்று கூறி நீங்கள் தவறு செய்கிறீர்கள். காஷ்மீரில் எல்லாம் சீராக உள்ளது. அங்கு நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை, மக்கள் உயிரிழக்கவும் இல்லை.
ஐநாவுக்கு பாகிஸ்தான் எழுதியுள்ள கடிதத்தில், ராகுலின் கருத்தை குறிப்பிட்டு, முக்கிய கட்சியின் தலைவர் அங்கு வன்முறை நடப்பதாக கூறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது என ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்திலும், மத்திய அரசு கூறுவது போல ஜம்மு-காஷ்மீரில் நிலைமை சீராக உள்ளதா? அப்படி சீராக உள்ளது என்றால் ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்கட்சி தலைவர்கள் எதற்காக திருப்பி அனுப்பப்பட்டனர் என்று கேள்வி எழுப்பியிருந்தது.
முன்னதாக இன்று காலை இது தொடர்பாக ராகுல்காந்தி தனது ட்வீட்டரில் கூறியதாவது, பல விவகாரங்களில் இந்த அரசாங்கத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், இதை நான் முற்றிலும் தெளிவுபடுத்துகிறேன்: காஷ்மீர் என்பது இந்தியாவின் உள் நாட்டு பிரச்சினை மற்றும் பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ இதில் தலையிட இடமில்லை.
ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நடைபெறுகிறது. ஏனெனில் இது உலகெங்கிலும் பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளராக அறியப்படும் பாகிஸ்தானால் தூண்டப்பட்டு ஆதரிக்கப்படுகிறது என கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, ராகுலின் கருத்தை குறிப்பிட்ட பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் அவர் குழப்பான அரசியல் நடத்துவதாக கூறி உள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் உசேன் சவுத்ரி தனது ட்வீட்டரில், ராகுல் "யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
உங்கள் அரசியலில் மிகப்பெரிய பிரச்சினை குழப்பம் உள்ளது என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் தலைவர் தனது பெரிய தாத்தா ஜவஹர்லால் நேருவைப் போல தெளிவாக நிற்கும்படி கேட்டுக் கொண்டார், நேருவை இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் தாராளவாத சிந்தனையின் அடையாளமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.