பாஜக சார்பாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலை குனிய வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தளவில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. இதில் வேலூர், தேனியை தவிர்த்து மற்ற 37 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தேசிய அளவில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களிலும், மற்ற கட்சிகள் 99 இடங்களிலும் வெற்றி பெற்றன. குறிப்பாக அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். அவர் போட்டியிட்ட இன்னொரு தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றார்.
தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்தாலும், மக்கள் அதனை உணர்ந்து பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கிறது.
வெளிநாட்டு பிரதமர்னு மோடியை ஸ்டாலின் சொன்னார் கள். இன்று அவர் பிரதமராக முன்னிறுத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்று இந்தியாவிலே அரசியல் இல்லாமல் லண்டனுக்கு சென்று விட்டார். இத்தகைய ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு ஸ்டாலின் தலை குனிய வேண்டும்.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.