தமிழக பாஜகவின் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா கவர்னராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தம் 5 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தர ராஜனும், மகாராஷ்டிர மாநில கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி, இமாச்சல பிரதேச கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா, கேரள கவர்னராக ஆரிப் முகமது கான்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் ஆவார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா கவர்னராக நியமித்திருக்கிறார்.
தெலங்கானா கவர்னர் பொறுப்பு குறித்து பேட்டியளித்த தமிழிசை,
''ஆண்டவனுக்கும், ஆண்டு கொண்டிருப்பவருக்கும் நன்றி. நான் தெலங்கானாவுக்குதான் நான் கவர்னர். தம்பிகளுக்கு நான் அக்கா. அண்ணன்களுக்கு நான் தங்கை. மூத்த காங்கிரஸ் தலைவரின் மகளாக இருந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவை தேர்ந்தெடுத்து, அதில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் உறுதியாக இருந்தேன்.
பாதைக்காக நான் பாசத்தை விட்டுக்கொடுக்க வேண்டி வந்தது. அன்பான தொண்டர்களுக்காக அப்பாவை விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது ரணமான விஷயம். நான் இன்னும் அம்மாவையும், அப்பாவையும் பார்க்கவில்லை. பாஜக அலுவலகம் என்னைப் பொறுத்தவரையில் அது கோயில். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது, கடினமான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்'' என்று கூறினார்.