அதிமுகவை பயமுறுத்தி பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜகவிற்கு கூட்டணி கட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் இருக்கின்ற கட்சிகளை விடக்கூடாது என்பதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நிர்பந்தப்படுத்தி பயமுறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றனர்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளோடு விரைவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மக்களவை தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து தேர்தல் பணியாற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.