கட்சியில் அதிக இளைஞர்களையும், சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
New Delhi: பாஜகவில் உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை ஜூலை 6-ம்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது. இது ஆகஸ்ட் 10-ம்தேதி வரைக்கும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவில் தற்போது மட்டும் 11 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளர் என்று கட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது-
கட்சி உறுப்பினர்களை குறைந்தது 20 சதவீதம் அதிகரிப்பதற்கு முடிவு செய்திருக்கிறோம். அதாவது 2.20 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
இளைஞர்கள் மற்றும் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவு, காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதிக உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
ஜூன் 17-ம்தேதி உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் தலைமை அலுவலகத்தில் முக்கிய உரையாற்றுவார்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.