This Article is From May 21, 2019

கருத்துகணிப்புகளை தொடர்ந்து டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளுகடன் பாஜக முக்கிய ஆலோசனை!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜக தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

கருத்துகணிப்புகளை தொடர்ந்து டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளுகடன் பாஜக முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இதற்கான முடிவுகள் வியாழன் அன்று அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 302 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த தேர்தலில் பாஜக உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றி இருந்தது. தற்போது அங்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்திருப்பதால், முந்தைய வெற்றி போல் பாஜகவுக்கு தற்போது கிடைக்காது என்றும், இதனால் ஏற்படும் இழப்பை ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கிடைக்கும் வெற்றி மூலம் பாஜக சரி செய்து கொள்ளும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், டெல்லியில் இன்று பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை கவுரவிக்கும் வகையில் பெரிய அளவில் விருந்து நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. விருந்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி அசோகா ஓட்டலில் இந்த இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் டெல்லி விருந்து நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இருவரும் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்வார்கள் என்று எதிர்பார்க்ப்படுகிறது.

டெல்லியில் நடைபெறும் பாஜகவின் விருந்து நிகழ்ச்சி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதேபோல, எதிர்க்கட்சிகள் தரப்பிலும் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

.