காங்கிரஸ் - ஜேடிஎஸ்க்கு மாற்றாக புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்போம்.
Bengaluru: கர்நாடகவில், காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசை நாங்கள் கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டோம். ஒருவேளை இந்த அரசு தானாக கவிழ்ந்தால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்போம் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் கீழ் மாநிலத்திற்கான விருப்பத்தின் படி செயல்படுவோம் என்றும், மாநிலத்திற்கான வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்ய மாட்டோம் என சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்திற்கு தேவையான எந்த திட்டத்தையும் காங்-ஜேடிஎஸ் கூட்டணி செய்யலாம். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்களுக்கு நிச்சயம் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். நாங்கள் ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சி செய்ய மாட்டோம். ஆனால், தானாக இந்த ஆட்சி கவிழ்ந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது.
காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில், தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் கட்சியாக இருக்கும் நாங்களே அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறோம்.
ஏற்கனவே, எடியூரப்பா கூறும்போது, கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடமாட்டோம். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டாம் என்று பாஜக மேலிட தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஒருவேளை இந்த அரசு தானாக விழுந்தால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்திற்கு நாங்கள் ஆசைப்படவில்லை என்று கூறியிருந்தார்.
கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தலில் 26 தொகுதிகளை இழந்ததன் மூலம் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளதாக கூட்டணி கட்சிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. ஆனால், பாஜகவோ, மொத்தமுள்ள 28 இடங்களில், 26 இடங்களை கைப்பற்றியது.
மேலும், சதானந்தா கவுடா கூறும்போது, மோடியின் புதிய அமைச்சரவையில், கர்நாடகாவில் இருந்து 4 மத்திய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் எங்களால் எளிதில் செய்து தர முடியும். அதேபோல், மக்களின் குறைகள் கேட்டு அறியப்பட்டு உடனடியாக அதனை நிவர்த்தி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.