ஆந்திராவுக்கு மோடி துரோகம் செய்துவிட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
Vijaywada: இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மண்ணைக் கவ்வும் என்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று சந்திரபாபு நாயுடு பேசியதாவது-
நாடு முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வுவது உறுதி.
ஆந்திர மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி துரோகம் செய்துவிட்டார். போலாவரம் திட்டத்தில் ஆந்திராவுக்கு காங்கிரசை விட பாஜகதான் அதிக துரோகம் செய்திருக்கிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு போலாவரம் நீர்ப்பாசன திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்திருந்தது. ஆந்திராவுக்கு பாஜக தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது.
போலாவரம் திட்டத்திற்காக ஆந்திரா மொத்தமே ரூ. 7,000 கோடி மட்டுமே பெற்றருக்கிறது. இன்னும் ரூ. 74,000 கோடியை தராமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது. மக்களவையில் எங்களது எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதால் நாங்கள் ஒன்றும் அஞ்சப்போவது இல்லை. ஆந்திரா மாநிலத்திற்காக நீதியை பெற்றுத்தர நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.