Mayawati : அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணி மக்கள் வரவேற்றுள்ளதாக தேஜஸ்வி கூறியுள்ளார்.
New Delhi: மக்களவை தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவின் மகன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிரிக் கட்சிகளாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் அங்கு மற்ற கட்சிகள் வெற்றி பெறுவதற்கு கடும் போட்டி கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், மாயாவதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணியை மக்கள் வரவேற்றுள்ளனர். மாநில கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. பீகாரிலும் முற்றிலுமாக பாஜகவை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விடும்.
இவ்வாறு தேஜஸ்வி கூறினார். இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க : “காங்கிரஸுடன் இணைவதா..?”- உஷ்ணமான மாயாவதி