சனிக்கிழமை நடக்கவிருக்கும் பேரணி பாஜக எதிர்ப்பு பேரணியாக இருக்கும் என்று மம்தா கூறியுள்ளார்.
Kolkata: மக்களவை தேர்தலில் 125 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்று மம்தா தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மிகப்பெரும் மாநாட்டை நடத்துகிறார்.
இந்த மாநாட்டில் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. தேவகவுடா, அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களுக்கு மம்தா அளித்த பேட்டியில், ''மக்களவை தேர்தலில் 125 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது. காங்கிரசைப் பொறுத்தவரையில் என்னால் எதுவும் சொல்ல முடியாது. இந்த தேர்தலில் மாநில கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்கும்'' என்றார்.