This Article is From May 12, 2019

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர் மர்ம மரணம்; திரிணாமூல் மீது குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தின் தாம்லுக், காந்தி, மேதினிபூர், பாங்க்புரா, பிஷ்ணுபூர், புருலியா, ஜர்கரம் உள்ளிட்ட தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது

2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன.

பாஜக தொண்டர் ஒருவர், மேற்கு வங்கத்தின் ஜர்கரம் பகுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது இறப்புக்குக் காரணம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம் சாட்டியுள்ளது பாஜக தரப்பு. 

கொல்கத்தாவில் இருந்து சுமார் 167 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜர்கரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த இடத்தில் மட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தில் உள்ள மேலும் 7 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பாஜக தொண்டரின் இறப்பு ஜர்கரம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இறந்தவர் பெயர் ரமின் சிங் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்க பாஜக நிர்வாகி கைலாஷ் விஜய்வார்கியா, திரிணாமூல்தான் ரமின் சிங் இறப்புக்கு காரணம் என்று பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஆனால், இதை முற்றிலும் மறுத்துள்ளது திரிணாமூல். 

2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் தேர்தல் நாளன்று மாநிலத்தின் பல இடங்களில் கலவரங்களும் மோதல்களும் வெடித்துள்ளன. குறிப்பாக திரிணாமூல் - பாஜக இடையில் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. 

மேற்கு வங்கத்தில் பலவீனமாக இருந்த பாஜக, கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த தேர்தலின் போது பெரிய தாக்கத்தை அக்கட்சி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜர்கரம் பகுதி, ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் தாக்கம் அதிகம் இருந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்திலும் தற்போது பாஜக வளர்ச்சி பெற்றிருக்கிறது. 

மேற்கு வங்கத்தின் தாம்லுக், காந்தி, மேதினிபூர், பாங்க்புரா, பிஷ்ணுபூர், புருலியா, ஜர்கரம் உள்ளிட்ட தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

.