மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 109 உறுப்பினர்கள் உள்ளனர்.
New Delhi: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும், அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கவர்னருக்கு எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.
கடநத் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இங்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 230. பெரும்பான்மை பெறுவதற்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் 114 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்களை கொண்ட பகுஜன் சமாஜ், ஒரு எம்எல்ஏவைக் கொண்ட சமாஜ்வாதி கட்சி ஆகியவை ஆதரவு அளித்தன.
இதையடுத்து 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சியான பாஜக பிரச்னையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா அளித்துள்ள பேட்டியில், 'சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி கவர்னரை வலியுறுத்தியுள்ளோம். இதில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசப்பட வேண்டும்' என்று கூறினார்.
மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் உறுப்பினராக இருந்த லோகேந்திர ராஜ்புத் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ட்விட் செய்த மாயாவதி, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக குறிப்பிட்டார். மாயாவதியின் முடிவைத் தொடர்ந்து மத்திய பிரதேச அரசில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.