Citizenship Amendment Act Protest - வடகிழக்குப் போராட்டங்கள், மேற்கு வங்கத்திலும் பரவியுள்ளது
ஹைலைட்ஸ்
- பாஜக கூட்டணி கட்சி ஏஜிபி, சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது
- பாஜக - ஏஜிபி கூட்டணிதான் அசாமில் ஆட்சி புரிந்து வருகிறது
- ஏஜிபியிலிருந்து பல நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர்
New Delhi: Citizenship Amendment Act Protest - பாஜகவுடனான கூட்டணியில் இருக்கும் முக்கிய வடகிழக்குக் கட்சியான அசோம் கான பரிஷத் (ஏஜிபி), திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னர் ஏஜிபி, குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்திருந்த நிலைநில், தற்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும், சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தையும் நாடவுள்ளதாம் ஏஜிபி.
தொடர்ந்து ஏஜிபி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேச்சுவாரைத்தை நடத்த இருக்கிறதாம். அசாம் மாநிலத்தில் பாஜக - ஏஜிபி கூட்டணிதான் ஆட்சி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆன போது, அதற்கு ஆதரவாக வாக்களித்தது ஏஜிபி. இது அக்கட்சிக்குள்ளேயே பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. பலரும் தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதேபோல வடகிழக்கில் இருக்கும் மூத்த பாஜக நிர்வாகி, ஜகதீஷ் புயான், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியிலிருந்து வெளியேறினார்.
மேலும் அசாம் சூப்பர்ஸ்டார் ஜதின் போராவும் பாஜகவிலிருந்து விலகினார். அவர், “குடியுரிமை திருத்த சட்டத்தை நான் ஏற்கவில்லை. எனது அடையாளம் அசாம் மக்களால் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர்களுக்குத் துணையாக இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ரவி ஷர்மா என்னும் இன்னொரு பிரபல நடிகரும், பாஜகவிலிருந்து விலகினார். பல திரைப்பட நட்சத்திரங்கள் குடியுரிமைச் சட்டத்துக்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அசாமில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. பல இடங்களில் அரசு, ஊரடங்கு உத்தரவு போட்டிருந்தாலும் அதையும் மீறி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
வடகிழக்குப் போராட்டங்கள், மேற்கு வங்கத்திலும் பரவியுள்ளது. அங்கும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜகதீப் தான்கர், மக்களிடம் அமைதி காக்குமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன.
குடியுரிமைச் சட்டத்தில் சமீபத்தில் செய்த திருத்தம், பாரபட்சமாகவும் சட்ட சாசனத்திற்கு எதிராகவும் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.