அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும்.
Bengaluru: கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசிலிருந்து இதுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை மாநில சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், ராஜினாமா குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது.
இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அவர் மேலும் இது குறித்து பேசுகையில், “சட்டமன்றத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படி செய்யும் உரிமை சட்டசபை சபாநாயகருக்குக் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி அவர் செயல்பட முடியாது.
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு என்னுடைய அட்வைஸ் இதுதான். உங்கள் கூட்டணியிலிருந்த 15 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் ராஜினாமா செய்துவிட்டார்கள். 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்துவிட்டார்கள். அவர்கள் அனைவரும் பாஜக-வை ஆதரிப்போம் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் உங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கப் போவதில்லை. எனவே, நீங்களும் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
மும்பையிலிருந்த சொகுசு ரெசார்ட்டில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், கடந்து ஒரு வாரத்துக்கு மேலாக தங்கியிருந்தனர். இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்படும் நிலையில், அவர்கள் மாநிலத்துக்குத் திரும்ப உள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும். எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.
அரசியல் குழப்பங்களுக்கு முதல்வர் குமாரசாமி, “பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார். எனது அரசு ஸ்திரமாகத்தான் உள்ளது. ஆனால், அதற்கு காலக்கெடு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.