This Article is From Jul 26, 2019

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!

ஆளுநரை சந்தித்து இன்றே பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!

ஆட்சி அமைக்கு உரிமை கோருகிறார் எடியூரப்பா

Bengaluru:

கர்நாடகாவில் 3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், இன்றைய தினமே ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தார் எடியூரப்பா. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறும்போது, ஆளுநரை சந்தித்து இன்றே பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்தேன், அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.  இன்று மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள் பதவிப்பிரமாணம் நிகழ்ச்சி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்றைய தினம் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமான அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் 3 எம்எல்ஏக்களை அதிரடியாக தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.

மேலும், மீதமுள்ள எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் இன்னும் ஒரிரு தினங்களில் அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ரமேஷ் ஜாரகிஹொளி, அதானி தொகுதி எம்எல்ஏ மகேஷ்குமட்டள்ளி உள்ளிட்டோர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல், சுயேட்சை எம்எல்ஏக்களில் ஒருவரான சங்கரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சங்கர் தன்னுடைய கட்சியை காங்கிரசில் இணைப்பதாக கூறியிருந்தார். எனினும், தற்போது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். 

மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா கடிதம் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார்.  

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117லிருந்து 101 ஆக குறைந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. 

 

.