This Article is From Sep 20, 2019

Chinmayanand: பாலியல் புகார்: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது!

பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் தனது கல்லூரியில் சேர உதவி செய்து, பின்னர் ஒரு வருடம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Chinmayanand Case: பாலியல் புகாரில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது.

Shahjahanpur:

உத்தர பிரதேசத்தில் சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

முன்னதாக, ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்துக்கு சொந்தமான கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ மூலம் புகாரளித்தார். பின்னர் அந்தப் பெண் திடீரென மாயமானார். 

பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து, சின்மயானந்த் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. எனினும், பாலியல் குற்றம் குறித்து அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 

இதைத்தொடர்ந்து, ஒருவாரம் கழித்து காணாமல் போன அந்த பெண்ணை உத்தர பிரதேச காவல்துறையினர் மீட்டனர். இது தொடர்பாக சட்டக்கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சிறப்பு புலணாய்வு குழு ஒன்று விசாரணை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அந்த குழுவினர், அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர், தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதி அறையையும் சோதனை செய்தனர். இதன் பின்னர் சின்மயானந்திடமும் சிறப்பு புலணாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். எனினும், தற்போது வரை அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. சின்மயானந்த் மீது மிரட்டல் மற்றும் கடத்தல் புகார் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அந்த பெண் கூறும்போது, தனது கல்லூரியில் சேர உதவி செய்த சின்மயானந்த், நான் குளிப்பதை வீடியோ எடுத்து அதனை வைத்து என்னை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதோடு, தொடர்ந்து ஒருவருடமாக எனக்கு சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். 

எனது விடுதி அறையில் இருந்து துப்பாக்கி முனையில் அழைத்து செல்லப்பட்டு சின்மயானந்துக்கு மசாஜ் செய்ய வற்புறுத்தப்பட்டேன். இதைத்தொடர்ந்தே ஆதாரப்பூர்வமாக சின்மயானந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் அவர் சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலும் நீதிபதி முன்பு அவர் அனைத்து குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக சின்மயானந்த் நேற்று மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

.