சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாஜக தலைவர் சின்மயானந்த் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
New Delhi: பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சின்மயானந்திடம் விசாரணை நடைபெறும் என மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்துக்கு சொந்தமான கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ மூலம் புகாரளித்தார். பின்னர் அந்தப் பெண் திடீரென மாயமானார்.
பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சுவாமி சின்மயானந்த் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பிறகும் கூட ஒருவருடமாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். சிறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அவரை அங்குள்ள போலீஸார் மிரட்டியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் மிரட்டல் வந்துள்ளது.
நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என் அறையை ஊடகங்கள் முன்பு திறக்கவேண்டும். என்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவேன் என்று அவர் கூறினார்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, 'சின்மயானந்தை நாங்கள் விசாரிக்க மாட்டோம் என்று கூறுவது தவறானது'. விசாரணைக்கு ஆஜராகும்படி, மூன்று நாட்கள் முன்னதாகவே நாங்கள் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். எனினும், அவரது உடல்நிலை சரி இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் அவர் இந்த குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறியதாகக் கூறப்படுகிறது, இது அவரை சுமார் 15 மணி நேரம் விசாரித்து, அந்த பெண் கொடுத்த வீடியோக்களை விசாரணைக் குழு பார்த்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் வைரலாக இருக்கும் வீடியோக்களை நாங்கள் அறிவோம், மேலும் சின்மயானந்த் மீதான சிறுமியின் புகாரையும் நாங்கள் அறிவோம். நாங்கள் நிச்சயமாக அவரிடம் கேள்வி எழுப்புவோம், மேலும், தேவையான மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு செப்.23ல் நாங்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.