கடந்த ஜனவரி மாதம், அரசியலுக்கு அதிகாரபூர்வமான என்ட்ரி கொடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரயங்கா காந்தி
Meerut: ஏப்ரல் 11 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பமாக உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் பிரசாரம் செய்த ஓர் உள்ளூர் தலைவர், பிரியங்கா காந்திக்கு எதிராக முகம் சுளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக-வைச் சேர்ந்த ஜெயகரன் குப்தா, உத்தர பிரதேச மீரட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘காங்கிரஸ், நல்ல காலம் (அச்சே தின்) வந்துவிட்டதா என்று நம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். ஸ்கர்ட் அணிந்திருப்பவர்கள் எல்லாம் கோயிலுக்குள் சென்றால் எப்படி நல்ல காலம் வரும்' என்று பேசினார். இது பிரியங்கா காந்தியை மறைமுகமாக தாக்கிப் பேசியது எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம், அரசியலுக்கு அதிகாரபூர்வமான என்ட்ரி கொடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரயங்கா காந்தி. தடாலடியாக அவருக்கு பொதுச் செயலாளர் பதவியும், கிழக்கு உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. பதவி கொடுக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து அவர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அவர் மீது தொடர்ந்து பாலின ரீதியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹரிஷ் திவேதி, ‘டெல்லியில் இருக்கும்போது பிரியங்கா காந்தி, ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் போட்டுக் கொள்கிறார். உத்தர பிரதேச கிராமங்களுக்கு வரும்போது அவர் சேலை கட்டிப் பொட்டு வைத்துக் கொள்கிறார்' எனப் பேசினார்.
அதேபோல பாஜக-வைச் சேர்ந்த இன்னொரு முக்கிய புள்ளி கைலாஷ் விஜயவர்கியா, ‘காங்கிரஸ் சாக்லெட் முகங்களை தேர்தலில் களமிறக்கி வருகிறது. இதற்குக் காரணம் அவர்களிடம் உண்மையான தலைவர்கள் இல்லை என்பதுதான்' என்றார்.
இதற்கு மத்திய பிரதேச அமைச்சர் சஜ்ஜன் சிங் வெர்மா, ‘பிரயங்கா காந்தி போல அழகானவர்கள் தங்கள் கட்சியில் இல்லை என்று பாஜ வருத்தப்படுகிறது. அவர்களிடம் ஒரேயொரு ஹேம மாலினி உள்ளார். அவரையும் பழைய பாடல்களுக்கு நடனமாட வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள்' என்று தரம் தாழ்ந்த வகையில் பதில் சொன்னார்.
காங்கிரஸும் பாஜக-வும், பரஸ்பரம் மற்ற கட்சிகளில் இருக்கும் பெண் தலைவர்கள் பற்றி தொடர்ந்து பாலியல் ரீதியான அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகின்றன.