This Article is From May 19, 2020

‘நீங்க எம்பி-யா இல்ல…’- காங்கிரஸின் ஜோதிமணி பற்றி பாஜகவின் கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து!

"கரு.நாகராஜன் போன்ற மூன்றாம் தர நபர்களை விவாதங்களுக்கு அழைத்தால், என்னைப் போன்றவர்களை விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்"

Advertisement
தமிழ்நாடு Written by

"சகோதரி ஜோதிமணி, உண்மையிலேயே ஒரு எம்பி-யா இல்லை கேவளமான மகளிரா என்பது எனக்குத் தெரியவில்லை"

Highlights

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விவாத நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்பு
  • விவாதத்தின்போது ஜோதிமணி பற்றி நாகராஜன் சர்ச்சைக் கருத்து
  • தனது கண்டனத்தைப் பதிவு செய்து ஜோதிமணி வெளிநடப்பு செய்தார்

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நாகராஜன், ஜோதிமணி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். 

விவாதத்தின் இறுதி பகுதியில் பேசிய நாகராஜன், “சகோதரி ஜோதிமணி, உண்மையிலேயே ஒரு எம்பி-யா இல்லை கேவலமான மகளிரா என்பது எனக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடியைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வெளியே சுற்றித் திரியும் காங்கிரஸ் நிர்வாகிகள் போலவா உள்ளார் பிரதமர்?” என்று சர்ச்சையாக பேசினார். 

இதற்கு குறிக்கிட்ட ஜோதிமணி, “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு சரியாக செயல்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினால், அதற்கு தரங்கெட்டத் தனமாக தனி மனித தாக்குதலில் ஈடுபடும் பாஜகவின் கரு.நாகராஜன் போன்ற மூன்றாம் தர நபர்களை விவாதங்களுக்கு அழைத்தால், என்னைப் போன்றவர்களை விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்,” என்று தனது கண்டனங்களைத் தெரிவித்து எழுந்து சென்றார்.

Advertisement

திமுக தரப்பில் பங்கேற்றிருந்த கலாநிதி வீராசாமியும், ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்து விவாதத்திலிருந்து பாதியிலேயே விலகினார். அவர் விலகும்போது, “இப்போது அமைதியாக இருந்துவிட்டால், கரு.நாகராஜன் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல ஆகிவிடும்,” என்றார். 

இறுதியாக விவாத நெறியாளர் நெல்சன், “எங்கள் நிகழ்ச்சி, அரசியல் ரீதியான கருத்துகளை எடுத்து வைப்பதற்கான களம் மட்டுமே. தனி மனித தாக்குதலை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்,” என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்தார். 

Advertisement
Advertisement