பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ்.
ஹைலைட்ஸ்
- எல்லையில் இந்தியா - சீனா படைகள் மோதலால் பதற்றம் அதிகரித்துள்ளது
- சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கைள் எழுந்துள்ளன
- ஒட்டுமொத்தமாக இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ்
New Delhi: சீனாவிலிருந்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் வலியுறுத்தியுள்ளார். மற்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதிகள் குறைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டிற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. சிலர் சீன தயாரிப்பு டிவிக்கள், மொபைல்களை தெருவில் போட்டு உடைக்கத் தொடங்கியுள்ளனர்.
டிக்டாக் போன்ற பிரபல சீன ஆப்களை அன் இன்ஸ்டால் பண்ண வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். சீன தொலைத் தொடர்பு சாதனங்களை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
நாம் ரசாயனங்கள், மொபைல் போன்கள், அவற்றின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறோம். அவையெல்லாம் அத்தியாவசிய பொருட்கள்தானா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இறக்குமதிகளை நாம் குறைக்க வேண்டும். குறிப்பாக சீனாவில் இருந்த இறகுமதிகளை குறைத்தே தீர வேண்டும்.
எல்லையில் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இனிமேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தூதரக ரீதியில் மத்திய அரசு சீனாவுக்கு அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தியா - சீனா எல்லை மோதல் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.