This Article is From Mar 21, 2020

முக்கிய அரசியல்வாதிகள், எம்.பி.க்களுக்கு கொரோனா பாதிப்பா? - பரபரப்பு தகவல்!!

Coronavirus Update : பிரபல பாடகி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் எம்.பி. ஒருவர் பங்கேற்க, அந்த எம்.பி. இன்னும் சில அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • பாடகி கனிகா பங்கேற்ற விருந்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு
  • கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது
  • கனிகாவுடன் விருந்தில் பங்கேற்ற அரசியல்வாதிகள், எம்.பி.க்கள் கலக்கம்
New Delhi:

இந்தியாவில் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் யாரும் விஐபிக்கள் கிடையாது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவல்களால் முக்கிய அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

பிரபல பாடகி கனிகா கபூர் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விருந்தின்போது எடுத்தது.

அந்த புகைப்படம் தற்போது அரசியல்வாதிகள் சிலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் பாடகி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிறன்று கனிகா பங்கேற்ற விருந்தில் பாஜகவின் முக்கிய தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, அவரது மகன் எம்.பி. துஷ்யந்த் சிங், உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். எனவே அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

எம்.பி. துஷ்யந்த் புதன் அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார்.

தற்போது வசுந்தரா ராஜேவும், துஷ்யந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

துஷ்யந்தை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுப்பிரியா படேல், காங்கிரஸ் கட்சியின் ஜிதின் பிரசாத், தீபிந்தர் ஹூடா ஆகியோரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்திற்கும் வந்துள்ளார். அவரது அருகே அமர்ந்திருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

.

டெரிக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'மத்திய அரசு எங்களை ஆபத்தில் தள்ளி விட்டது. எல்லோரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடி கூறினார். ஆனால் நாடாளுமன்றம் கூட்டாக உறுப்பினர்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் துஷ்யந்துக்கு அருகே சுமார் இரண்டரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். என்னைப் போன்ற இன்னும் 2 எம்.பி.க்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட வேண்டும்' என்றார்.

41 வயதாகும் பாடகி கனிகா கபூர் லண்டனிலிருந்து மார்ச் 9-ம்தேதி மும்பைக்கு வந்தார். 2 நாட்களுக்குப் பின்னர் அவர் லக்னோ சென்றார். தனக்குப் பாதிப்பு இருந்ததை மறைத்து விருந்தில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை கனிகா மறுத்திருக்கிறார். அவர் பங்கேற்ற விருந்தில் சுமார் 200 விஐபிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் தன்னை பரிசோதித்த அதிகாரிகள் தனக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று கூறி, மும்பை செல்ல அனுமதித்ததாக கனிகா விளக்கம் அளித்துள்ளார். 

கனிகா கான்பூர் நகருக்கும் சென்று தனது உறவினர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். 

97l4rdro

பாஜக மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே

3 நாட்களுக்கு முன்பு கனிகாவுக்கு வறட்டு இருமல் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில்தான் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'கடந்த 4 நாட்களாகக் காய்ச்சல் இருந்தது. நானும், எனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் செயல்பட்டு வருகிறேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் நன்றாக உள்ளனர். 10 நாட்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் என்னை சோதனை செய்தார்கள். அப்போது சாதாரணமாகத்தான் இருந்தது. நான்கு நாட்களுக்கு முன்புதான் அறிகுறிகள் தென்பட்டன' என்றார்.

இந்தியாவில் 223 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பாடகி கனிகா வெளியிட்டிருக்கும் தகவல் மற்றும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஆகியவற்றாலும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

.