கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார்.
முன்னதாக, தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், குமரி வந்த பிரதமர் மோடிக்கு எதிராக நெல்லை-கன்னியாகுமரி மாவட்ட எல்லைப்பகுதியான காவல்கிணறு என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு திரண்டிருந்த மதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ பேசிக்கொண்டிருந்தபோது இருகட்சி தொண்டர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
இதைதொடர்ந்து, பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார். பின்னர், கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்ட மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.