This Article is From Jul 24, 2018

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம்… ராகுலை விமர்சித்த மத்திய அமைச்சர்!

சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் வங்கிகளில் இந்தியர்களின் பண வைப்பு உயர்ந்துள்ளதாக கூறி ராகுல் காந்தி, மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தார்

New Delhi:

சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் வங்கிகளில் இந்தியர்களின் பண வைப்பு உயர்ந்துள்ளதாக கூறி ராகுல் காந்தி, மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தார். இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல்.

முன்னர் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பண அளவு, 2017 ஆம் ஆண்டு முந்தைய ஆண்டை விட 50 சதவிகிதம் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டில் இந்தியர்களால் மொத்தமாக 7,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டித்தான் ராகுல் காந்தி, மோடி அரசை விமர்சித்தார். 

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் பியூஷ் கோயல், ‘ஒரு ஆதாரமற்ற அறிக்கையை ஆதாரமாக வைத்துக் கொண்டு ராகுல் காந்தி ஏன் தேசத்தை அவமானப்படுத்துகிறார் என்று சொல்ல வேண்டும். ஆதாரமற்றத் தரவுகளை வைத்துக் கொண்டு ராகுல் பேசுவது இது ஒன்றும் புதியது இல்லைதான். சமீபத்தில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போதும் அவர் ஆப்படித் தான் பேசினார். சுவிஸ் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கைபடி, 2017 ஆம் ஆண்டு இந்தியர்களால் அங்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தின் அளவு 2016 ஆம் ஆண்டை விட 34 சதவிகிதம் குறைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசைக் கண்டும், மோடி தலைமையிலான ஆட்சியைக் கண்டும் கருப்புப் பண பதுக்குபவர்கள் அஞ்சுகிறார்கள் என்று இந்தத் தரவுகளை வைத்துக் கூற முடியும். கருப்புப் பண வெளியேறுதலைத் தடுக்க தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னர் ஆட்சி புரிந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதற்காக ஒன்றும் செய்யவில்லை’ என்று சொன்னவர்,

‘கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரு நாடுகளும் பலதரப்பட்டத் தகவல்களை ஆவணப்படுத்தும். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஆவணப்படுத்தியத் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படும்’ என்று முடித்தார். 
 

.