குண்டுவெடிப்பில் ஒரு இராணுவ வீரரும் நான்கு துணை இராணுவப் படையினரும் இறந்துள்ளனர்
Cotabato, Philippines: தெற்கு பிலிப்பைன்சில் பதட்டம் மிகுந்த பகுதியின் இராணுவ சோதனைச் சாவடியின் முன்பு இன்று காலை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து படை வீரர்கள் இறந்துள்ளனர்.
விடிகாலையில் இராணுவத்தினரும் அரசுக்கு ஆதரவான துணை இராணுவப் படைவீரர்களும் சோதனைச் சாவடி முன்பு நிறுத்தப்பட்ட ஒரு வேனைச் சோதனையிட்ட போது இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் கெர்ரி பெசானா தெரிவித்தார்.
"இச்சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஒரு இராணுவ வீரரும் மேலும் பல துணை இராணுவப் படையினரும் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பாசிலான் தீவிலுள்ள கிறித்துவ நகரமான லாமிடானின் புறநகரப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்த விசாரணையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். சோதனையில் தான் சிக்கிக்கொள்வோம் என்ற அபாயத்தை உணர்ந்த நிலையில்தான் குற்றவாளி குண்டை வெடிக்கச் செய்திருக்கவேண்டும் என உள்ளூர் அதிகாரி முஜிவ் ஹட்மான் கூறுகிறார்.
பாசிலான் தீவானது அல் கய்தாவுடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாதக் குழுவினர் வலுவாக இருக்கும் பகுதியாகும். இவர்களே இத்தீவுக்கூட்டத்தில் பல குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
தெற்கு பிலிப்பைன்சில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டு வரும் ஆயுதம் ஏந்திய குழுக்களால் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் உயிரை இழந்திருக்கக்கூடும் என அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.
அதிபர் ராட்ரிகோ ட்யூடெர்ட் அண்மையில் தெற்கு பிலிப்பைன்சில் முஸ்லிம்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும் விதமாக ஒரு சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார். இதனால் இப்பகுதியில் பதட்டம் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.