This Article is From Jul 02, 2020

சீன செயலிகளுக்குத் தடை விதித்தது ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’: மத்திய அமைச்சர் பன்ச்!

இந்தியாவில் வரும் காலங்களில் அதிக அளவு முதலீடு செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தன சீன டெக் நிறுவனங்கள்.

சீன செயலிகளுக்குத் தடை விதித்தது ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’: மத்திய அமைச்சர் பன்ச்!

இதுவரை டிக் டாக் 200 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 30 சதவீதம் இந்தியாவில்தான் செய்யப்பட்டன.

ஹைலைட்ஸ்

  • இரண்டு நாட்களுக்கு முன்னர் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது
  • 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது
  • டிக் டாக், ஹலோ உள்ளிட்ட பிரபல செயலிகளும் அதில் அடங்கும்
New Delhi:

சில நாட்களுக்கு முன்னர் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது இந்திய அரசு. இந்த நடவடிக்கையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘சீனா மீது தொடுக்கப்பட்ட டிஜிட்டல் ஸ்டிரைக்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், “நாட்டு மக்களின் தகவல்களைக் காப்பாற்றவே நாங்கள் சீன செயலிகளுக்குத் தடை விதித்தோம். இது ஒரு டிஜிட்டல் ஸ்டரைக். இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. ஆனால், யாராவது நம்மிடம் அத்துமீற நினைத்தால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம்,” என்றார். கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதைப் போன்ற ஒரு கருத்தைத்தான் சீனாவுக்கு எதிராக தெரிவித்திருந்தார். 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம் மீது இந்திய விமானப் படை குண்டு போட்டது. இந்த நடவடிக்கையை சில ஊடகங்கள், ‘டிஜிட்டல் ஏர் ஸ்டிரைக்' என்று வர்ணித்தன. இதை நினைவில் கொண்டுதான் மத்திய அமைச்சர், ரவி சங்கர் பிரசாத், ‘டஜிட்டல் ஸ்டிரைக்' என்கிற வாக்கியத்தைப் பயன்படுத்தியுள்ளார். 

உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் டிக் டாக் செயலிக்கு, இந்தியாதான் மிகப் பெரிய மார்க்கேட். இதுவரை டிக் டாக் 200 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 30 சதவீதம் இந்தியாவில்தான் செய்யப்பட்டன. டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ், இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டு வந்தது. 

இந்திய அரசுக்கும் டிக் டாக்கில் கணக்கு இருந்தது. சுமார் 11 லட்சம் பேர் மத்திய அரசின் கணக்கைப் பின் தொடர்ந்து வந்தார்கள். அந்தக் கணக்குத் தற்போது நீக்கப்பட்டுள்ளது. 

அதேபோல சீனாவில் ட்விட்டருக்கு மாற்றாக இருக்கும் சினா வெய்போ (Sina Weibo) என்னும் சமூக வலைதளத்தில், பிரதமர் மோடிக்கு கணக்கு இருந்தது. அதிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் போஸ்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் வரும் காலங்களில் அதிக அளவு முதலீடு செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தன சீன டெக் நிறுவனங்கள். குறிப்பாக மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இன்டெர்நெட் வசதி என்பது குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் இணையம் என்பது நாட்டின் பல மூளைகளிலும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சீன டெக் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, அந்நாட்டுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனாவின் இன்னொரு பிரபல நிறுவனமான வாவே (Huwei)-வின் 5ஜி தொழில்நுட்பத்தை எந்த நாடும் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நேரத்தில், இந்தியாவின் இந்த முடிவு சீனாவுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனப்படுகிறது. 
 

With inputs from PTI

.