This Article is From Dec 11, 2019

''சூடானில் உயிரிழந்த 2 தமிழர்கள் உள்பட 14 இந்தியர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை''

சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்களை இந்திய தூதரகம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''சூடானில் உயிரிழந்த 2 தமிழர்கள் உள்பட 14 இந்தியர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை''

கேஸ் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதால் விபத்து ஏற்பட்டதாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.

Khartoum:

சூடான் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்கள் உள்பட 14 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. 

சூடான் நாட்டின் தலைநகர் கார்டோமில் கடந்த 3-ம்தேதி பீங்கான் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. கேஸ் டேங்கர் லாரி வெடித்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி தமிழர்கள் 2 பேர் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்தனர். மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் என மொத்தம் 23 பேர் பலியாகினர். 

சம்பவத்தின்போது 16 இந்தியர்கள் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் உயிரிழந்த இந்தியர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சூடானின் தலைநகர் கார்டோமில் ஏற்பட்ட பீங்கான் தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக மருத்துவ மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை இன்று முதல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மரபணு மாதிரியை இந்திய தூதரகம் சேகரித்தது. இதன் மூலம் யார் உயிரிழந்தார்கள் என்பது கண்டுபிடிக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

ட்விட்டர் பக்கத்தில் இந்திய தூதரகம் சார்பாக 14 பேரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அரியானா, 3 பேர் பீகார், 3 பேர் ராஜஸ்தான், 3 பேர் உத்தரப்பிரதேசம், 2 பேர் தமிழ்நாடு மற்றும் ஒருவர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஆவர். 

பிரதீப் குமார் மற்றும் பவன் குமார் ஆகியோர் அரியானாவையும், நிதிஷ் மிஷ்ரா, நீரஜ் குமார் சிங், அமித் குமார் திவாரி ஆகியோர் பீகார், ரவிந்திர குமார் மன், ஜெய்தீப், கைலாஷ் கஜ்லா ஆகியோர் ராஜஸ்தான், மோகித் குமார், பிரதீப் குமார் வர்மா, ஹரிநாத் ரஜ்பார் ஆகியோர் உத்தரப்பிரதேசத்தையும், ராம கிருஷ்ண ராமலிங்கம், ஜெயக்குமார் செல்வராஜு ஆகியோர் தமிழ்நாட்டையும், வெங்கடாச்சலம் சிதம்பரம் புதுச்சேரியையும் சேர்ந்தவர்கள்.

விபத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் அடையாளம் காணப்படவில்லை அல்லது காணாமல் போயிருக்கலாம் என கருதப்படுகிறது. 

வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார், மொத்தம் 58 இந்தியர்கள் விபத்து நேர்ந்த தொழிற்சாலையில் பணியாற்றியதாகவும், விபத்து நடந்தபோது அவர்களில் 33 பேர் பாதுகாப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

கேஸ் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதால் விபத்து ஏற்பட்டதாக சூடான் அரசு தெரிவித்துள்ளது. 

முதல்கட்ட தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக தீப்பற்றி எரியும் பொருட்கள் அடிக்கடி இருப்பில் வைக்கப்பட்டது விபத்திற்கான காரணம் எனவும் சூடான் அரசு கூறியுள்ளது. 
 

.