ட்விட்டரில் ரன்வீரின் பதிவு வைரலாகவே, அதைப் பார்த்த ப்ராக்லெஸ்னரின் வழக்கறிஞர், பால் ஹேமன், ரன்வீருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்
ஹைலைட்ஸ்
- ப்ராக்லெஸ்னரின் வாசகத்தை மாற்றி பயன்படுத்தினார் ரன்வீர்
- ப்ராக்லெஸ்னரின் வக்கீல், பால் ஹேமமன் ஆவார்
- ஹேமன், ரன்வீருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
Mumbai: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்கிற்கு, WWE சூப்பர் ஸ்டாரான ப்ராக்லெஸ்னரின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியை ரன்வீர் சிங், நேரில் சென்று பார்த்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா வெற்றியடைந்தது. போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து ரன்வீர், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுடன் ஒரு செல்ஃபி எடுத்துள்ளார்.
அதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரன்வீர், “Eat. Sleep. Dominate. Repeat. பெயர் என்னானு தெரியும்ல. ஹர்திக். ஹர்திக் பாண்டியா” என்று போட்டுள்ளார். இது WWE சூப்பர்ஸ்டாரான ப்ராக்லெஸ்னரின் பிரபலமான கோஷமான, “Eat. Sleep. Conquer. Repeat.” என்பதுடன் ஒத்துப் போனது.
ட்விட்டரில் ரன்வீரின் பதிவு வைரலாகவே, அதைப் பார்த்த ப்ராக்லெஸ்னரின் வழக்கறிஞர், பால் ஹேமன், ரன்வீருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ரன்வீர் சிங் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக இதேபோன்ற ஒரு வாசகத்தை ‘கிரிக்கெட் உலகக் கோப்பை'-யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் தோனியைப் பாராட்டி ட்வீட்டியது. அதற்கு பால் ஹேமேன், “WWE யூனிவர்சல் சாம்பியன் ப்ராக்லெஸ்னருக்கு நான் கொடுத்த வரிகளை வைத்து தோனியை ப்ரொமோட் செய்வதற்கு கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு வாழ்த்துகள். அதைப் பயன்படுத்தியதற்கு எங்களுக்கான ராயல்டி தொகையை பணமாகவோ, காசோலையாகவோ, பங்குச் சந்தை மூலமாகவோ அல்லது கிரிப்டோகரன்சி மூலமாகவோ கொடுக்கலாம்” என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.