மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Mumbai: மகாராஷ்டிராவில் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்த கைதி ஒருவர் ஜாமீன் வழங்கும்படி கோரியுள்ளார். இதற்கு கொரோனா பரவலை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி வெளியே செல்வதற்குப் பதில் சிறைக்குள் இருப்பது எவ்வளவோ மேலானது என்று கூறி ஜாமீன் தர மறுத்து விட்டார்.
மும்பையின் புறநகர்ப் பகுதியான காட்கோபரை சேர்ந்த ஜிதேந்திர மிஷ்ரா என்பவர், கொலை வழக்கு ஒன்றில் நவி மும்பையின் தலோஜா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில், ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.எஸ். படேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது-
மும்பையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கைதி ஜாமீன் கேட்டிருக்கிறார். கொரோனா குறித்து வெளியில் உள்ள நகராட்சி அதிகாரிகளை விட உள்ளே சிறைகளில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை இங்குள்ளவர்கள் செய்துள்ளனர்.
கொரோனாவால் மும்பையே தி கலங்கி வருகிறது. இந்த சூழலில் வெளியே செல்வதற்கு பதிலாக சிறைக்குள்ளே இருப்பது எவ்வளவோ மேலானது.
கைதிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளியே சென்று கொரோனா தொற்றை ஏற்றிக் கொண்டு மற்றவர்களுக்கும் பரப்ப வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது.
இவ்வாறு நீதிபதி கூறினார். நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராவும், அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பையும் உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.