This Article is From Jun 01, 2020

‘விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை’- மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்கச் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அரசு சென்ற மாதம் உறுதி அளித்திருந்தது. 

‘விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை’- மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!

"அமைச்சர்கள், “கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள்தான் மத்திய அரசுக்கு மிக முக்கியமானவர்கள்,” என்று கூறினார்கள். 

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது
  • பாதுகாப்பு கேபினட், பொருளாதார கேபினட் கமிட்டி சந்திப்புகளும் நடந்தன
  • சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. அதில் விவசாயிகள் பயனடையும் வகையில் 14 பயிர்களுக்கு சுமார் 50 முதல் 83 சதவீதம் கூடுதல் விலை கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கூட்டப்பட்டுள்ளன. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கேபினட் கமிட்டி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டிக் கூட்டங்கள் நடந்தன. அதில் சாலையோர வியாபாரிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், “கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள்தான் மத்திய அரசுக்கு மிக முக்கியமானவர்கள்,” என்று கூறினார்கள். 

அமைச்சரவை சந்திப்புக்குப் பின்னர் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர், “தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த விவசாயிகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்படும். ஆகஸ்ட் மாதமே காலக்கெடுவாக வைக்கப்படும். கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன்கள் வாங்கலாம். விவசாயிகள் அவர்கள் விருப்பப்படும் இடத்தில் விளை பொருட்களை விற்றுக் கொள்ளலாம்,” என்றார். 

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்கச் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அரசு சென்ற மாதம் உறுதி அளித்திருந்தது. 

தற்போது எடுக்கப்பட்டுள்ள புதிய முடிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்த நடவடிக்கையின் மூலம் விவசாயிகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குத் தங்களது பொருட்களை எடுத்துச் சென்று விற்கலாம். ஆன்லைன் வர்த்தகம் மூலமும் அவர்கள் பயன் பெறலாம்,” என்று தெரிவித்தார். 

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி வளர்ச்சியில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட லாக்டவுன் மூலம், நாட்டில் சுமார் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. 

பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலே, ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு தரப்பு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சென்ற மாதம் உள்நாட்டு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டன. நடப்பு நிதி ஆண்டில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இப்படி தளர்வுகள் ஒரு பக்கம் அறிவிக்கப்பட்டாலும், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

தற்போதைய நிலவரம் குறித்து, தன் இரண்டாவது ஆட்சியின் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டு நாம் வளர்ச்சிப் பாதையில் சென்றோம். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உலகை ஆச்சரியப்படுத்திய மாதிரியே, பொருளாதார மீட்சியிலும் உலகை இந்தியா ஆச்சரியப்படும்,” எனத் தெரிவித்தார். 


 

.