இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக சுமார் 1000 வங்காளதேச நாட்டவர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர் (File)
Dhaka: இந்தியா முழுவதும் என்ஆர்சி அமல்படுத்துவது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் வங்கதேசத்தை சேர்ந்த 445 பேர் இந்தியாவில் இருந்து திரும்பி வந்துள்ளதாக வங்கதேச நாட்டு எல்லை பாதுகாப்புப்படை தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச எல்லை பாதுகாப்பு படை தலைவர் மேஜர் ஷாபின்புல் இஸ்லாம் கூறியதாவது, 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக சுமார் 1000 வங்காளதேச நாட்டவர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதில், 445 பேர் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் இருந்து திரும்பும் போது கைது செய்யப்பட்டர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் பிரதிநிதிகள் மூலம் அவர்களின் இருப்பிடத்தில் விசாரணை செய்ததில் சட்டவிரோதமாக இந்தியா சென்ற அவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த அத்துமீறிய நுழைவு வங்கதேசம் மற்றும் இந்தியாவின் எல்லைப் படைகளுக்கு இடையே எந்தவிதமான பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், ஷாபின்புல் இஸ்லாம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இந்தியாவில் என்.ஆர்.சி.யை அமல்படுதுவது என்பது முற்றிலும் இந்தியாவின் "உள் விவகாரம்" என்றும், இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் நல்லது என்றும் கூறினார்.
வங்கதேச எல்லைப்பாதுகாப்பு படையானது, சட்டவிரோதமாக எல்லையை தாண்டுபவர்களை தடுக்கும் பணியை தொடர்ந்து, செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.