This Article is From Dec 06, 2019

அம்பேத்கரின் 63-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிப்பு! மோடி, உத்தவ் தாக்கரே மரியாதை!!

BR Ambedkar death anniversary : பாபா சாகிப் என பரவலாக அன்புடன் அழைக்கப்படும் B.R. அம்பேத்கர், சமூகத்தில் நிலவிய தீண்டாமை, பாகுபாடு உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடினார்.

அம்பேத்கரின் 63-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிப்பு! மோடி, உத்தவ் தாக்கரே மரியாதை!!

மும்பையில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் உத்தவ் தாக்கரே.

New Delhi/Mumbai:

நாடு முழுவதும் இன்று அம்பேத்கரின் 63-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலித் மக்களின் அடையாளம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியான அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சூலே உள்ளிடோரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். 

அம்பேத்கரை புகழ்ந்துள்ள பிரதமர் மோடி, அரசியலமைப்பை சுட்டிக்காட்டி அவர் 'தனித்தன்மையான பரிசை வழங்கியுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சமூக நீதிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அம்பேத்கர் பாபா சாஹேப் என்று பரவலாக அழைக்கப்படுகிறார். மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால் மற்ற மாநிலங்களைவிட அங்கு நினைவுதின நிகழ்ச்சிகள் அதிகம் நடந்துள்ளன.

அம்பேத்கர் நினைவுதினம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'அரசியலமைப்பு சட்டம் என்ற அடிப்படையில் அம்பேத்கர் நாட்டுக்கு தனித்தன்மையான பரிசை அளித்திருக்கிறார். ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணே அதுதான். அவருக்கு இந்த நாடு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கும்' என்று கூறியுள்ளார். 

அம்பேத்கரை புகழ்ந்து மோடி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், 'நேர நிர்வாகம் மற்றும் செயலாக்கமும் நமது பணியை குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாக முடிக்க உதவும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அம்பேத்கர். இந்தியாவின் மூல மந்திரமாக அம்பேத்கரை குறிப்பிடலாம்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

.

மும்பையின் சைத்தியாபூமியில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

சைத்தியாபூமி என்பது அம்பேத்கரின் நினைவிடம் அமைந்திருக்கும் இடமாகும். இங்குதான், கடந்த 1956-ல் அம்பேத்கர் மறைந்ததற்கு பிறகு இங்கு அடக்கம் செய்யப்பட்டார். 

மத்திய மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சைத்தியாபூமியில், அம்பேத்கரின் நினைவு தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து மரியாதை செலுத்துகின்றனர். 

அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, 'அநீதிக்கு எதிராக போராடியவர் அம்பேத்கர். இந்து மில் பகுதியில் அம்பேத்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. அதுவும் அநீதி மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக போராடுபவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்.' என்று கூறியுள்ளார். 
 

.

இதேபோன்று ஏராளமான தலைவர்களும் அம்பேத்கரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், 'நினைவு நாளில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அரசியலமைப்பு சட்டம் உள்ளது. அதனைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அரசியலமைப்பில் உள்ள வார்த்தைகள் நமது செயல்களுக்கு தூண்டுகோலாக அமையும்' என்று கூறியுள்ளார். 
 

.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பதிவில், 'ஜனநாயகத்தின் நாயகனாக அம்பேத்கர் இருந்தார். அவர் மிகச்சிறந்த தேச பக்தர், தேசியவாதி, மனிதநேயர். ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறுவது வளர்ச்சிக்கு தேவையானது என்று முழங்கியவர்' என்று குறிப்பிட்டுள்ளார். 

பி.ஆர். அம்பேத்கர் கடந்த 1891, ஏப்ரல் 14-ம்தேதி பிறந்தார். 1956 டிசம்பர் 6-ம்தேதி காலமானார். பாபா சாஹேப் என அன்புடன் அழைக்கப்படும் அவர், சமூகத்தில் நிலவிய தீண்டாமை, பாகுபாடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடினார். பெண்கள், தொழிலாளர்கள் உரிமை பெறுவதற்கு அம்பேத்கர் குல் கொடுத்தார். தலித் புத்த அமைப்பு ஏற்பட அவர் முக்கிய காரணம். தலித்களின் முன்னேற்றத்திற்கு தனது வாழ்வை அர்ப்பணித்ததால் அவர், தலித்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். 
 

.