சுமார் 7 லட்சம் ஹெக்டேர் அளவு காட்டுப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
Porto Velho, Brazil: சர்வதேச அளவில் அமேசான் காட்டுத் தீயை அணைக்க வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், ராணுவத்தை அனுப்பி தீயை அணைக்க பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனிசுலா, பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் அமேசான் காடு பரவியுள்ளது. உலகின் மிக அரிய வகை உயிரினங்களும், அரிய வகை மருத்துவ தாவரங்களும் இங்குள்ளன. ஆக்ஸிஜனை உலகுக்கு அள்ளி வழங்கும் காடு என்பதால் இதனை புவியின் நுரையீரல் என்றும் அழைப்பார்கள்.
இந்த நிலையில் அங்கு கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகி உள்ளன. சுமார் 7 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான காட்டுப்பகுதி மற்றும் அங்கு இருக்கும் உயிரினங்கள் தீயில் அழிந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை கட்டுக்குள் வராத நிலையில் உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜேர் போலோசான்றோ கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே அமேசான் காட்டுத் தீயை விரைந்து அணைக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் அமேசான் காட்டுத் தீ தொடர்பான படங்கள் வைரலாகி வருகிறது. உயிரினங்கள் கருகிக் கிடக்கும் காட்சிகளை பதிவிட்டு ஏராளமான பிரபலங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மற்றும் சா பாலோ நகரில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். அவர்கள் அமேசான் காட்டுத் தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில், ராணுவத்தை அனுப்பி காட்டுத் தீயை அணைக்க பிரேசில் அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ராணுவம் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளது.