டெல்லியின் காற்று மாசு மிக மோசமாக உள்ளதைக் காட்டும் புகைப்படம்
ஹைலைட்ஸ்
- டெல்லியில் இன்னும் சில நாட்களுக்கு காற்று மாசுபட்ட நிலையிலேயே இருக்கும்
- கெஜ்ரிவால், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்
- பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்
New Delhi:
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான நிலைக்கு அதிகரித்துள்ளது. அடுத்த சில நாள்களுக்கு மாசுபாடு அதிகரித்த நிலையில் நீடிக்க இருப்பதால் டெல்லியில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெளியில் வருபவர்கள் முகத்துக்கு முகமூடி அணிந்து மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசுபாடை குறைத்து காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல கட்ட முயற்சிகளை மாநகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டெல்லியில் மாநகர பகுதிகளில் நடக்கும் கட்டுமான வேலைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
”இன்று முழுவதும் தூசிப்புயல் எழும். இந்த நிலை வருகிற வெள்ளிக்கிழமை வரும் தொடரும்” என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் சுவாசமற்ற நிலை, கண் எரிச்சல் என பல தாக்குதல்கள் மீண்டும் மக்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அமைச்சர்கள் படை உடன் ஆளுநருக்கு எதிராக உள்ளிருப்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, “இதுவரையில் இல்லாத அளவில் டெல்லியில் 18 மடங்கு மாசுபாடு அதிகரித்துள்ளது. மக்கள் நிலை பிரச்னைக்குரியதாக இருக்கும்போது மத்திய, மாநில அதிகாரிகள் ஏசி அறையில் தர்ணாவில் ஈடுபட்டு வருவது என்ன நியாயம்” என டெல்லி மக்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
ஆனால் கெஜ்ரிவாலோ, 'கடந்த மூன்று மாதங்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசியல் தூண்டுதலால் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் எந்த வித ஆலோசனையையும் நடத்த முடியவில்லை. எனவே, அவர்களின் ஸ்டிரைக்க வாபஸ் பெற வையுங்கள்' என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாள் ஒன்றுக்கு காற்றின் வேகம் மணிக்கு 25- 35 கிமீ வரையில் இருக்கும் என்றும் வெப்பநிலை அதிகப்பட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் என்றும் கணிக்கிடப்பட்டுள்ளது.